Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஜப்தி பரபரப்பு!

செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஜப்தி பரபரப்பு!

திருவண்ணாமலை: சாலை விரிவாக்கப் பணிக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்காததால், செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்கள் மற்றும் சார் ஆட்சியரின் வாகனத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஜப்தி நடவடிக்கைக்காக வழக்கறிஞர் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்ற செல்லராஜுக்குச் சொந்தமான 30 சென்ட் நிலம், சாலை விரிவாக்கப் பணிக்காக கடந்த 2001ஆம் ஆண்டு அரசால் கையகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.68 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்பட வேண்டியிருந்ததாகத் தெரிகிறது. ஆனால், உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால், செல்வராஜ் கடந்த 2003ஆம் ஆண்டு செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் நீண்டகாலமாக உரிய பதில் அளிக்கப்படாமலும், இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாமலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இழப்பீட்டுத் தொகையை வழங்காததால், செய்யாறு சார் ஆட்சியரின் வாகனம் மற்றும் சார் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கணினிகள், மேசைகள், பீரோக்கள், நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய சார்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நில உரிமையாளர் செல்வராஜின் வழக்கறிஞர் செங்குட்டுவன், நீதிமன்ற அமீனா மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்டோர் ஜப்தி நடவடிக்கையை மேற்கொள்வதற்காகச் செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது, அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் யாரும் இல்லை எனக் கூறப்பட்டதால், ஜப்தி நடவடிக்கையை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து தகவலறிந்த புதிதாகப் பொறுப்பேற்ற அரசு வழக்கறிஞர் உதயசங்கர், நீதிமன்ற அமீனா மற்றும் வழக்கறிஞர் செங்குட்டுவன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அலுவலகத்தில் உரிய அதிகாரிகள் இல்லாததால், நடவடிக்கையை மேற்கொள்ளச் சிறிது கால அவகாசம் தேவை என அவர் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தற்போது இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நிலம் கையகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகளாகியும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாத விவகாரத்தில், சார் ஆட்சியர் அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் செய்யாறு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!