தமிழகத்தில் உள்ள
கோவில்களில்
கட்டணமில்லா தரிசனத்திற்கு பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை
ஸ்ரீரங்கத்தில் அமைச்சர் ரமேஷ் பேட்டி.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோவிலில் இன்று சாமி தரிசனம் பிறகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்
நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகக் கோயில்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணமோ, அல்லது கட்டணமில்லா தரிசனத்திற்குப் பணமோ வசூலிக்கக் கூடாது எனத் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்ரீரங்கத்தில் உள்ள கட்டணமில்லா கழிவறையில் பணம் வசூலித்த நபர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது தான் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்துள்ளது. ஒரே நாளில் அனைத்து மாற்றங்களையும் கொண்டு வர முடியாது.
முந்தைய ஆட்சியின் திட்டங்களை ஆய்வு செய்து, எவை முக்கியமோ அவற்றுக்கு முன்னுரிமை அளித்து டெண்டர் விடப்பட்டு வருகிறது.
திருச்சியில் தற்பொழுது நடந்து வரும் மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு திருச்சி மாநகராட்சி நல்ல ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.
கோவில் கட்டுமானப் பணிகளின் போது கால்வாய்களுக்குள் விழுந்த பெரிய கற்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
பருவமழை தொடங்கியுள்ளதால், சென்னையில் தேங்கும் தண்ணீரை அகற்ற ஊழியர்கள் இரவோடு இரவாகப் பணியாற்றி வருகின்றனர். திருச்சியிலும் சுகாதாரப் பணிகள் தொடர்ச்சியாக முடுக்கி விடப்பட்டுள்ளன.
பண்டிகை காலங்களில்,
விசேஷ நாட்களில் கோயில்களுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவது வழக்கம்.அவ்வாறு வரும்
பக்தர்கள், கோயில் ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடப் போவதாக வெளியாகும் தகவல், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சவாலாக இருக்குமா? என்ற கேள்விக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரட்டும், அப்புறம் பார்க்கலாம் என்று அமைச்சர் ரமேஷ் பதிலளித்தார்.
மேலும், அவர் கூறும்பொழுது திருச்சியில் தவெக-வின் 3வது மாநாடு நடைபெறுவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.
திருவண்ணாமலை கோயிலில் உரிய அனுமதி பெற்ற பிறகே மாற்று மதத்தினர் உள்ளே வந்துள்ளனர். அதில் எந்த விதிமீறலும் இல்லை. தமிழக மண் மதச்சார்பற்ற சமூக நீதிக்கான மண்.
இங்கே எந்தக் காலத்திலும் மதத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.
முதலமைச்சர் எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையோடு அனைத்துக் கோயில்கள், பள்ளிவாசல்கள் மற்றும் சர்ச்சுகளுக்குச் செல்கிறார். நாங்களும் அதைப் பின்பற்றி அனைவரையும் சமமாகப் பார்க்கிறோம். ஒரு சிலருக்கு மத அரசியலைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்பதால், அவர்கள் இதைப் பெரிதாக்குகிறார்கள்.
இவ்வாறு அமைச்ச ரமேஷ் கூறினார்.
