சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதனால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது. சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி விளங்குகிறது. கடந்த சில நாட்களாக அதிகப்படியான புவி வெப்பத்தின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து, ஆங்காங்கே தரைகள் தெரியும் அளவிற்கு காட்சியளித்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியில் தற்போது தண்ணீர் 14.21 அடியாகவும், மொத்த நீரின் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியில் 1,390 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 655 கன அடியாகவும் உள்ளது. தற்போது தினமும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து சென்னை குடிநீர் மற்றும் சிப்காட் தேவைகளுக்காக 203 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர்ந்து மழை பெய்தால் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் எந்தவித தட்டுப்பாடும் ஏற்படாது எனவும், அவ்வாறு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலையில், சிக்கராயபுரம் கல்குவாரியில் தேங்கியிருக்கும் அதிகப்படியான மழைநீரை சுத்தம் செய்து சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும் என்றும் ஏரியை கண்காணித்து வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் சோழவரம், செங்குன்றம், புழல் சுற்றுவட்டார இடங்களில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்குன்றத்தில் 12 செமீ மழை பதிவாகியுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
புழல் ஏரிக்கு நேற்று முன்தினம் 663 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 1485 கன அடியாக அதிகரித்துள்ளது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், 2037 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் தற்போது 14.95 அடி உயரத்தில் நீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்காக புழல் ஏரியில் இருந்து 171 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. புழல் ஏரிக்கு ஒரே நாளில் 111 மில்லியன் கன அடி நீர்வரத்து வந்துள்ளதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது.
