கோவை பீளமேடு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் அகிலன். இவர் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உயிரை மாய்த்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அகிலனின் தாயார் கௌசல்யா, மகனின் விபரீத முடிவு கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கௌசல்யா, பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், “பள்ளியில் சாதி ரீதியாக துன்புறுத்தியதால் விரக்தியடைந்த அகிலன் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இதற்கு உடன் பயிலும் இரு மாணவர்கள், வகுப்பு ஆசிரியர் விஜயகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் அருண் குமார் ஆகிய 4 பேர் தான் காரணம்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, பீளமேடு காவல்துறையினர் ஆசிரியர்கள், மாணவர்கள் என 4 பேர் மீது விபரீத முடிவுக்கு தூண்டுதல், தன்னிச்சையாக காயம் ஏற்படுத்துதல், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளி வகுப்பறையில் யாரெல்லாம் மாட்டிறைச்சி சாப்பிடுவீர்கள்? என ஆசிரியர் விஜயகுமார் கேட்டதாகவும், அன்று முன்பே மாணவர்கள் இருவர் அகிலனை சாதிப்பெயர் சொல்லி திட்டியும், அடித்தும் வந்துள்ளனர் எனவும், தலைமை ஆசிரியர் அருண்குமாரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவர் அகிலனின் குடும்பத்தினரை, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, அகிலனின் குடும்பத்திற்கு ரூபாய் 6 லட்சம் நிதியுதவி வழங்குவதற்கான ஆணையை அமைச்சர் சம்பத்குமார் வழங்கினார்.
மேலும், அகிலனின் சகோதரி நேத்ராவுக்கு, ஆனைகட்டி பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் இளநிலை உதவியாளராகப் பணி நியமன ஆணையையும் அமைச்சர் சம்பத்குமார் வழங்கினார். இந்த நிகழ்வின்போது, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர், மாநகர காவல் ஆணையாளர் ரம்யா பாரதி மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிரி பிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.
