திருப்பத்தூர் அருகே மீன் வியாபாரம் செய்து வந்தவர்களைத் தாக்கி, பெண்ணின் நைட்டியைக் கிழித்ததாகப் புகார்!
காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி ஒரு பவுன் தங்கக் கம்மலைப் பறித்துச் சென்றதாகவும் குற்றச்சாட்டு காவல்துறை நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
திருப்பத்தூர் மாவட்டம், காவேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (49), அவரது மருமகன் துரை (39), அவரது மனைவி சரஸ்வதி (27) ஆகியோர், திருப்பத்தூர் அடுத்த சிமணபுதூர் பகுதியில் உள்ள ஏரியை குத்தகைக்கு எடுத்து, ஏரிகள் சங்கத்தின் மூலம் கடந்த 12 ஆண்டுகளாக மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். ஏரியில் மீன் பிடித்து விற்பனை செய்வதுடன், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் தயாரித்தும் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்நிலையில், சிமணபுதூர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் மற்றும் அவரது நண்பர் அருண் ஆகியோர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோன்று கடந்த ஓராண்டுக்கு முன்பும் பிரச்சினை ஏற்பட்டதாகவும், அப்போது ஏரிகள் சங்க

உறுப்பினர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று நந்தகுமார் வீட்டின் அருகே சென்றபோது ஏற்பட்ட தகராறில், நந்தகுமார் மற்றும் அருண் ஆகியோர் தகாத வார்த்தைகளால் பேசி, மாரிமுத்து மற்றும் சரஸ்வதி ஆகியோரைத் தாக்கியதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சரஸ்வதி அணிந்திருந்த நைட்டியைக் கிழித்து அவமானப்படுத்தியதுடன், அவரது காதில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கக் கம்மலையும் பறித்துச் சென்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இந்தத் தாக்குதலில் காயமடைந்த மாரிமுத்து மற்றும் சரஸ்வதி ஆகிய இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கிராமக் காவலர் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நந்தகுமார் மற்றும் அருண் ஆகியோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
