சுந்தர் சி இயக்கத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நடிகை நயன்தாரா சென்னை பாரிமுனையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளிகாம்பாள் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.
திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக அம்மனின் அருளைப் பெற விரும்பிய நயன்தாரா, காளிகாம்பாள் அம்மனுக்குச் சிறப்பு அர்ச்சனை மற்றும் தீபாராதனைகள் செய்து தீவிரமாகப் பிரார்த்தனை மேற்கொண்டார். கோவில் நிர்வாகம் மற்றும் அர்ச்சகர்கள் அவருக்கு மாலை அணிவித்து, பிரசாதங்கள் வழங்கி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தை பிரபல இயக்குநர் சுந்தர் சி இயக்கியுள்ளார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் இத்திரைப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார். இதில் நயன்தாராவுடன் இணைந்து மூத்த நடிகை ஊர்வசி, குஷ்பு, சினேகா, ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சில திரைப்படங்கள் படப்பிடிப்பு முடிந்த பிறகும் நம் மனதை விட்டு நீங்குவதில்லை; அந்த வகையில் ‘மூக்குத்தி அம்மன் 2’ என் மனதிற்கு மிக நெருக்கமான ஒரு படைப்பு” என்று நயன்தாரா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
