தாய்சேய் நலப்பணிகளை இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் செய்வதாக தவறான தகவல்! கிராம சுகாதார செவிலியர்கள் கடும் எதிர்ப்பு – 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 16ஆம் தேதி சென்னையில் மாநில அளவிலான போராட்டம்!
தமிழகத்தில் கிராம சுகாதார செவிலியர்கள் மேற்கொண்டு வரும் தாய்சேய் நலப்பணிகள் மற்றும் குடும்ப நலப்பணிகளை இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொள்வதாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் தெரிவிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி, தமிழ்நாடு அரசு கிராம, பகுதி, சமூகநல மற்றும் சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதுதொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த மனுவில், கிராம சுகாதார செவிலியர்கள் பல ஆண்டுகளாக தாய்சேய் நலப்பணிகள், குடும்ப நலப்பணிகள், தடுப்பூசி செலுத்துதல், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் நலன் பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், போலியோ, தொண்டை அடைப்பான், கக்குவான் உள்ளிட்ட தொற்று நோய்களைத் தடுப்பதிலும் கிராம சுகாதார செவிலியர்களின் பங்களிப்பு முக்கியமானது என்றும், ஆனால் தற்போது அவர்களின் பணிகள் வேறு பணியாளர்களால் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுவது தங்களது பணியைப் புறக்கணிக்கும் செயலாக இருப்பதாகவும் கூட்டமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இடைநிலை சுகாதாரப் பணியாளர்களை துணை சுகாதார நிலையங்களிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும், கிராம சுகாதார செவிலியர்கள் மேற்கொள்ளும் தாய்சேய் நலப்பணிகளை இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் செய்வதாகத் தவறான தகவல்கள் அனுப்புவதைத் தடுக்க வேண்டும், பணி மூப்பு அடிப்படையில் உரிய பதவி உயர்வு வழங்க வேண்டும், பாலினப் பாகுபாடின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும், மாவட்ட அளவில் திட்டப் பணிகளுக்கென CHN பணியிடங்களை உருவாக்க வேண்டும், சமூகநல சுகாதார செவிலியர்களுக்கு தாய்சேய் நல அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் நவம்பர் 16ஆம் தேதி சென்னையில் மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தவும் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
நீண்டகாலமாக பணியாற்றி வரும் கிராம சுகாதார செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கூட்டமைப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
