கஞ்சா விற்பனை…வாலிபர் கைது
திருச்சி பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் பாலக்கரை பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த பீமநகர் பகுதியை சேர்ந்த முகமது இக்பால் வயது 28 என்பவரை கைது செய்தனர் . அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
போதை மாத்திரைகள் விற்பனை.. பறிமுதல்
திருச்சி செந்தண்ணீர்புரம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக பொன்மலை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு ரோந்து சென்றனர். அப்போது அங்கு போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த திண்டுக்கல் மாவட்டம் குரும்பாப்பட்டி பகுதியை சேர்ந்த அரவிந்த் என்கிற வெள்ளை ராஜா என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 350 போதை மாத்திரைகள், 30 கிராம் கஞ்சா, ரூபாய் 600 பணம், ஒரு கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கல்லூரி மாணவன் தற்கொலை…
திருச்சி மேல கல்கண்டார்கோட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் மணிகண்டன் வயது 20 . இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் நான்காம் ஆண்டு படித்து வந்தார். மணிகண்டனுக்கு சரியாக படிப்பு வரவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர்
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மதுவுக்கு அடிமையான வாலிபர் தற்கொலை
திருச்சி தென்னூர் பழைய அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் பூபதி வயது 23. பட்டதாரி வாலிபர் ஆன இவர் டெக்ரேசன் வேலை செய்து வந்துள்ளார். இவர் மதுவுக்கு அடிமையானதால் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது தந்தை கண்டித்துள்ளார் . இதனால் மனமுடைந்த பூபதி கடந்த 5-ந்தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தில்லைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
