Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாவட்ட ஆட்சியருக்கே அச்சுறுத்தலா? – பிரேமலதா கேள்வி!

மாவட்ட ஆட்சியருக்கே அச்சுறுத்தலா? – பிரேமலதா கேள்வி!

ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இத்தகைய அச்சுறுத்தல் என்றால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்தளவுக்கு துணிச்சல் இருந்திருக்கும்? என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் தனது எக்ஸ் தளத்தில், “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், இரவு நேரங்களில் தொலைபேசியில் தொடர்புகொண்டு தொந்தரவு செய்ததோடு, மதுபோதையில் அவரது இல்லத்திற்குச் சென்று அச்சுறுத்தியதாகவும் வெளியாகி வரும் குற்றச்சாட்டுகள் கடும் கண்டனத்திற்குரியவை. ஒரு மாவட்டத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் மாவட்ட ஆட்சியருக்கே இதுபோன்ற அச்சுறுத்தல்கள் ஏற்படுகின்றன என்றால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்த அளவுக்குத் துணிச்சல் இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே அதிர்ச்சியாக உள்ளது.

பெண்களைப் பாதுகாக்கும் அரசு என்று பெருமை பேசும் முதலமைச்சர் ஆட்சியில், ஒரு பெண் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருப்பது தமிழக அரசின் நிர்வாக அவலத்தையே வெளிப்படுத்துகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலும் மிகுந்த கவலையளிக்கிறது. எனவே, தமிழக முதலமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையைக் கண்டறிய வெளிப்படையான, பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது எவ்வித அரசியல் தலையீடுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழக அரசும் இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்தாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஒரு பெண் மாவட்ட ஆட்சியருக்கே உரிய பாதுகாப்பை வழங்க முடியாத அரசு, தமிழகத்தில் உள்ள மற்ற பெண்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யும் என்ற கேள்வி எழுகிறது. பெண்களின் பாதுகாப்பிலும் கண்ணியத்திலும் எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்கக் கூடாது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!