Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் இரட்டை கொலை வழக்கில்..6 பேர் கைது

திருச்சி மாவட்டம், சமயபுரம் இரட்டைச் சிறார்கள் கொலை வழக்கில் ஆறு பேர் கைது – ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றபோது போலீசாரைத் தாக்க முயன்ற குற்றவாளி மீது துப்பாக்கிச்சூடு!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே, தீபாவளி அன்று இரண்டு சிறார்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஆறு குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த நவம்பர் 8ஆம் தேதி, பட்டாசு வெடித்ததில் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தங்களது நண்பர் விக்னேஷை பார்ப்பதற்காக வீர ராகுல் மற்றும் விஷால் ஆகிய இருவரும், தங்களது ஆறு நண்பர்களுடன் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.

பின்னர், மருத்துவமனையில் இருந்து சுமார் 80 மீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்குச் சென்றபோது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆறு பேர் சேர்ந்து ராகுல் மற்றும் விஷாலை தாக்கியுள்ளனர். இதில் இருவரும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து உயிரிழந்த ராகுலின் சகோதரர் அளித்த புகாரின் பேரில், சமயபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சிசிடிவி காட்சிகள், தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கெனி வின்ஸ், கரனிஷன், சரவணன், சிவநேசன், கிருபாகரன் மற்றும் ஹரிஹரன் ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே, விசாரணையில் உயிரிழந்த ராகுலுக்கும், குற்றவாளி கெனி என்பவருக்கும் இடையே ஒரு சிறுமியுடனான பழக்கம் தொடர்பாக ஏற்பட்ட தனிப்பட்ட முன்விரோதம், கொலைக்கான சாத்தியமான காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இருப்பினும், கொலைக்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று நவம்பர் 11ஆம் தேதி, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தைப் பறிமுதல் செய்வதற்காக குற்றவாளி சிவநேசனை போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது, போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்கியதுடன், மறைத்து வைத்திருந்த ஆயுதத்தைக் கொண்டு போலீசாரை தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

போலீசார் எச்சரித்தும் தொடர்ந்து தாக்க முயன்றதால், தாக்குதலைத் தடுக்கும் வகையில் காவல் ஆய்வாளர் குணசேகரன் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் குற்றவாளி சிவநேசனின் இடது முழங்காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது.

மேலும், இந்தச் சம்பவத்தில் காயமடைந்த காவலரும், சிவநேசனும் உடனடியாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அனைத்து சட்டப்பூர்வ நடைமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டு வருவதாகவும் திருச்சி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!