ஆந்திர மாநிலத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்திவரப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதையடுத்து மாவட்ட எஸ்பி., வி.வி.சாய்பிரனீத் உத்தரவின்படி, போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக-ஆந்திர எல்லையான திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நாகலாபுரம் சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது பைக்கில் வந்த நபர்களை பிடித்து சோதனை செய்தனர்.
அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை நடத்தியபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 12 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதுபற்றிய விசாரணையில், அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முத்துக்காளை (30), சேலம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன் (32) என்பதும் தெரியவந்தது. திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சாவை விற்பனை செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
