கேரளாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை தாரா, தனது மகன் இறந்த பிறகு இளம் வயதில் விதவையாக்கப்பட்ட தனது மருமகள் கிருஷ்ணாவிற்கு சொந்த முயற்சியில் மறுமணம் செய்து வைத்துள்ளார்.கேரளாவில் நடைபெற்றுள்ள இந்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
அன்பால் மட்டுமல்ல, இதயத்தின் விசாலத்தாலும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார் கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள அரீக்கரா பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் தாரா டீச்சர்.
தனது மகன் உயிரிழந்த பிறகு விதவையான மருமகளின் வாழ்க்கை அத்துடன் முடிந்துவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். சொந்த மகளாகவே கருதி கிருஷ்ணாவை அன்புடன் அரவணைத்து வந்த தாரா டீச்சர், தற்போது அவருக்கு மறுமணம் செய்து வைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
கடந்த 2024 ஜூலை 9ஆம் தேதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவரது மகன் கண்ணன் உயிரிழந்தார். கணவரின் எதிர்பாராத மரணத்தால் பெரும் துயரத்தில் ஆழ்ந்த கிருஷ்ணா, கணவரின் நினைவுகளுடன் மாமியார் வீட்டிலேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தார்.
மகனை இழந்த துயரமும், மருமகளின் தனிமையும் கண்ணனின் பெற்றோரான தாரா மற்றும் பிரகாஷ் இருவரையும் பெரிதும் வேதனைப்படுத்தின. இதற்கிடையே மற்றொரு சோகமாக, தாராவைத் தனியாக விட்டுவிட்டு அவரது கணவர் பிரகாஷும் காலமானார்.
மகனையும் கணவரையும் இழந்த வேதனையில் இருந்தபோதிலும், தாரா டீச்சரின் மனதில் ஒரே ஒரு எண்ணம்தான் இருந்தது.தான் இழந்த மகனையும் கணவரையும் மீண்டும் பெற முடியாது. ஆனால், தனது மருமகளுக்கு இன்னும் ஒரு வாழ்க்கை இருக்கிறது அல்லவா? கணவரின் நினைவுகளுடனேயே கிருஷ்ணாவின் வாழ்க்கை முடிந்துவிடக் கூடாது. அவருக்கும் அன்பும் அக்கறையும் நிறைந்த புதிய வாழ்க்கை அமைய வேண்டும் என்று விரும்பினார்.
இதையடுத்து, தனது சொந்த முயற்சியிலேயே கிருஷ்ணாவுக்கு மறுமணம் செய்து வைக்க தாரா டீச்சர் முடிவு செய்தார். ஒரு மாமியாராக மட்டுமல்லாமல், உண்மையான தாயின் அன்பும் அக்கறையும் எப்படி இருக்கும் என்பதைத் தனது செயலால் நிரூபித்துள்ளார்.
இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து தாரா டீச்சருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஒரு பெண்ணின் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி இவ்வளவு அக்கறையுடன் சிந்தித்து, தனது மருமகளுக்குப் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த அந்தத் தாயின் பரந்த மனதுக்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
