விழுப்புரம்: செஞ்சி சிறுமி விவகாரம் தொடர்பாக செங்கல் சூளையில் சிபிசிஐடி அதிகாரிகள் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த மாதம் 12-ஆம் தேதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போனார்.
சிறுமி காணாமல் போய் இன்றோடு 36 நாட்கள் ஆகும் நிலையில், சிபிசிஐடி அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, செஞ்சி அருகே உள்ள காப்புக்காடு பகுதியிலும் சிபிசிஐடி அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, ஏற்கனவே செங்கல் சூளையில் பணியாற்றிய 5 ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணை ஆலம்பூண்டி கிராமத்தைச் சுற்றியே நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே பலமுறை பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், 30-க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் செங்கல் சூளையில் உள்ள சாம்பலை சலித்து, அதில் ஏதேனும் தடயம் கிடைக்கிறதா அல்லது சிறுமி எரிக்கப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் தடயங்களை சேகரிக்கும் பணியில் சிபிசிஐடி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
