திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் செந்தில்ராஜ். இவர் கடந்த மார்ச் மாதம் தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் செந்தில் ராஜ் முகத்தை பிளேடால் கிழித்து தாக்கி அவரிடமிருந்து செல்போனை திருடி சென்றனர்.
இதுகுறித்து செந்தில்ராஜ் தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் . அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் செந்தில்ராஜை தாக்கி செல்போன் பறித்தது தஞ்சை மானோஜிப்பட்டியை சேர்ந்த சாதிக் பாட்ஷா மகன் வாசிம் அகமது ( வயது 23), கோதண்டராமன் மகன் அரவிந்த் (20), பசுபதி கோவிலை சேர்ந்த காசிநாதன் மகன் சிவகுமார் (21) ஆகிய 3 பேர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து வாசிம் அகமது, சிவக்குமார், அரவிந்த் ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து இரு சக்கர வாகனம், இரண்டு செல்போன்களை கைப்பற்றினர். இது தொடர்பான வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது . இந்த வழக்கு விசாரணை தஞ்சாவூர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு வந்தது . வழக்கை நீதிபதி பிரபுராம் விசாரித்து குற்றவாளிகளான வாசிம் அகமது, சிவகுமார், அரவிந்த் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் , அரசு தரப்பு வழக்கறிஞர் சிவானந்த விஜயலட்சுமி , நீதிமன்ற தலைமை காவலர் ரேணுகா ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பாராட்டினார்.
