Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் பாஜகவின் எதிர்காலம் வலுவாக இருக்கும்!- நயினார்

தமிழகத்தில் பாஜக எப்போதும் வலுவாகவே உள்ளது. வரக்கூடிய காலம் பாரதிய ஜனதா கட்சியின் காலமாக மாறும் – நயினார் நாகேந்திரன் பேட்டி

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில்:- புத்தகக் கொள்முதலில் அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு இருப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார். ஆனால், எங்களுக்கு அவர் மீதே சந்தேகம் உள்ளது. நான் இது குறித்துக் கூறி ஒரு மாதம் ஆகியும் இப்போதுதான் விசாரணைக்கே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். இந்த காலதாமதமே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. முன்னதாகவே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியிருக்க வேண்டும்.

தமிழகத்தில் 98,000 விவசாயிகள், ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான போராட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்க விஷயம்.

புத்தக கொள்முதல் விவகாரம் குறித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளதற்கு, கம்யூனிஸ்ட் எம்பி வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து கேள்விக்கு:-

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான ஜீவானந்தம், நல்லகண்ணு ஆகியோர் ரயிலிலும் பேருந்திலுமே பயணம் செய்தனர். நல்லகண்ணு தனக்குக் கிடைத்த ரூ.1 கோடியை கட்சிக்கே வழங்கினார். ஆனால், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் விலையுயர்ந்த காரில் வருகிறார். அது நண்பருடைய கார் என்று அவர் விளக்கமளித்தாலும், பொது வாழ்க்கையில் இருக்கும்போது எழும் விமர்சனங்களுக்கு வருத்தப்படத் தேவையில்லை. நீதிபதியின் கருத்துக்கு எதிர்க்கருத்து சொல்வது சரியானது அல்ல.

நவம்பர் 4-ஆம் தேதி வரை தமிழகத்திற்கு வர வேண்டிய 67 டி.எம்.சி காவிரி நீர் வராததால் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் கருகியுள்ளன. கர்நாடக முதலமைச்சர் சிவகுமாரிடம் இது குறித்து வலியுறுத்தாமல், டெல்லியில் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் கலந்துகொண்டு சிரித்து பேசிக்கொண்டிருப்பது காவிரி டெல்டா மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம். சோனியா காந்தியின் சுயசரிதையில் சீக்கியர் படுகொலை குறித்தோ, இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்தோ, ராஜீவ் காந்தி தாக்கப்பட்டது குறித்தோ எழுதப்பட்டுள்ளதா?

தமிழக முதலமைச்சர் இனிமேலாவது மக்கள் மீது அக்கறை கொண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கையில் எடுத்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தீபாவளி அன்று மட்டும் 15 படுகொலைகள் நடந்துள்ளன. கடலூரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 15 பேர் காணாமல் போயுள்ளனர். செஞ்சியில் காணாமல் போன குழந்தையை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. பெண்களுக்கு எதிரான 30-க்கும் மேற்பட்ட குற்றங்களில் ஆளுங்கட்சியினர் தவெக ஈடுபட்டுள்ளனர். இதுவரை எந்த அமைச்சரும் காவல் நிலையத்திற்கு சென்று எஃப்.ஐ.ஆர் குறித்து ஆய்வு செய்ததில்லை. ஆனால், தற்போது ஒரு அமைச்சர் காவல் நிலையத்திற்கு சென்று பெண் காவலரிடம் விசாரணை நடத்துவதும், இரவு நேரத்தில் எஸ்.பி-யை வீட்டிற்கு அழைப்பதும் தவறான நடைமுறை.

திருச்செந்தூர் விவகாரத்தில் வேல்முருகன் அளித்த விளக்கத்தையும், மன்னிப்பு கேட்டதையும் ஏற்றுக்கொள்கிறோம். அதேநேரத்தில் குப்புசாமியின் பேச்சுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். தன்னைத்தானே தமிழ் அறிஞர் என்று கூறிக்கொண்டு பொறுப்பற்ற முறையில் பேசுவது கண்டனத்திற்குரியது. இனிமேல் அவர் இவ்வாறு பேசக்கூடாது.

தமிழகத்தில் பாஜக எப்போதும் வலுவாகவே உள்ளது. வரக்கூடிய காலம் பாரதிய ஜனதா கட்சியின் காலமாக மாறும் என தெரிவித்தார்.

error: Content is protected !!