நெல்லையில் ‘இளைய புரட்சித் தலைவி’ திரிஷா பேரவை இன்று (நவம்பர் 24) தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் விஜய்- நடிகை திரிஷா நட்பு குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருந்து வருகிறது. விஜய், திரிஷா இருவரும் முதன்முதலாக 2004-ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். தொடர்ந்து திருப்பாச்சி, ஆதி, குருவி உள்ளிட்ட திரைப்படங்களில் ஜோடியாக நடித்தனர். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 2023-ஆம் ஆண்டு வெளியான லியோ திரைப்படத்தில் மீண்டும் இணைந்தனர்.
விஜய் அரசியலில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிய பின்னர், திரிஷாவின் பெயரும் அரசியல் விவாதங்களில் அடிபடத் தொடங்கியது. முதல்வர் விஜய் பதவியேற்பு விழா, சுதந்திர தின விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் திரிஷா பங்கேற்றது கவனம் பெற்றது. கடந்த செப்டம்பர் மாதம் இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் கார் பந்தய நிகழ்ச்சியில் விஜய்யும் திரிஷாவும் பங்கேற்றனர். அண்மையில் நவம்பர் 5-ந் தேதி சென்னையில் ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக பங்கேற்றதும் பேசுபொருளானது.
இதனால் தவெக கட்சி மற்றும் ஆட்சி விவகாரங்களிலும் திரிஷாவின் பெயர் தொடர்ந்து அடிபடுகிறது. நமது மின்னம்பலத்தில் கடந்த 20-ந் தேதி ”திரிஷா தலைமையில் ‘கோஷ்டியாக’ திரண்ட அமைச்சர்கள்.. ‘அட்வைசர்’ ஜானுக்கு எதிராக ‘கலகம்’ – விஜய்க்கு புதிய சிக்கல்” என ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில், விஜய்யின் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமிக்கு எதிராக அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, விஜய்யின் மற்றொரு ஆலோசகர் விஷ்ணு ரெட்டி உள்ளிட்டோர் திரிஷாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தியதை நாம் பதிவு செய்திருந்தோம்.
இந்த நிலையில் நெல்லையில், “இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை” இன்று தொடங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
