Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

68 பந்துகளில் 181 ரன்கள்… கே.எல். ராகுலின் சாதனையை உடைத்த பிரியான்ஷ் ஆர்யா

68 பந்துகளில் 181 ரன்கள்… கே.எல். ராகுலின் சாதனையை உடைத்த பிரியான்ஷ் ஆர்யா

டெல்லி : சையது முஷ்டாக் அலி கோப்பை (Syed Mushtaq Ali Trophy) டி20 கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் 181 ரன்கள் விளாசிய டெல்லி அணியின் கேப்டன் பிரியான்ஷ் ஆர்யா, ஒரு டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். இதன் மூலம், 2026-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காகப் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக கே.எல். ராகுல் அடித்திருந்த ஆட்டமிழக்காத 152 ரன்கள் என்ற முந்தைய சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

இந்தூரில் உள்ள டேலி கல்லூரி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில், டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய 25 வயதான இடதுகை பேட்ஸ்மேன் பிரியான்ஷ் ஆர்யா, தமிழகப் பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 68 பந்துகளைச் சந்தித்த அவர், 7 பவுண்டரிகள் மற்றும் 19 இமாலய சிக்ஸர்களுடன் 181 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சையது முஷ்டாக் அலி கோப்பை வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் அடித்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு ஹைதராபாத் அணிக்காக மேகாலயா அணிக்கு எதிராக திலக் வர்மா அடித்திருந்த 151 ரன்களே இத்தொடரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதி கபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற உலக சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பிரியான்ஷ் ஆர்யா நூலிழையில் தவறவிட்டார். தென்னாப்பிரிக்காவின் லுவான்-டே பிரிட்டோரியஸ் (Lhuan-de Pretorious), சிஎஸ்ஏ டி20 புரோ கோப்பையில் டைட்டன்ஸ் அணிக்காக நைட்ஸ் அணிக்கு எதிராக அடித்த ஆட்டமிழக்காத 188 ரன்களே உலக சாதனையாக உள்ளது. அந்தச் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் 19-வது ஓவரில் பெரிய ஷாட் ஆட முயன்ற பிரியான்ஷ் ஆர்யா, தமிழகப் பந்துவீச்சாளர் எம். சித்தார்த் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பிரியான்ஷ் ஆர்யாவின் இந்த அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் என்ற பிரம்மாண்ட ஸ்கோரைக் குவித்தது. தொடர்ந்து கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய தமிழ்நாடு அணி, டெல்லி பந்துவீச்சாளர்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் டெல்லி அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி அணியின் பந்துவீச்சில் திக்வேஷ் ரதி 4 விக்கெட்டுகளையும், சுயாஷ் சர்மா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

இந்த ஒரே இன்னிங்ஸின் மூலம் பிரியான்ஷ் ஆர்யா மேலும் பல முக்கியச் சாதனைகளையும் தன்வசப்படுத்தியுள்ளார். ஒரே டி20 இன்னிங்ஸில் 19 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம், கடந்த ஆண்டு மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) தொடரில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்காக வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு எதிராக 19 சிக்ஸர்கள் அடித்த நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலனின் உலக சாதனையை அவர் சமன் செய்துள்ளார். மேலும், இந்திய மண்ணில் அடிக்கப்பட்ட அதிகபட்ச டி20 ஸ்கோர், ஒரு கேப்டன் அடித்த அதிகபட்ச டி20 ஸ்கோர் ஆகிய சாதனைகளையும் அவர் படைத்துள்ளார்.

அத்துடன், ஆடவர் டி20 கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் பவுண்டரிகள் மூலம் 150 ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் பிரியான்ஷ் ஆர்யா, நடப்பு சையது முஷ்டாக் அலி கோப்பையில் அபாரமான ஃபார்மில் உள்ளார். தமிழ்நாட்டுக்கு எதிரான இந்தப் போட்டிக்கு முன்பாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிராக நடைபெற்ற போட்டிகளிலும் அவர் முறையே 58 மற்றும் 55 ரன்கள் குவித்துத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!
Secret Link