தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் மீது சரமாரியாக குற்றம் சுமத்திய தி.மு.க., கவுன்சிலர்
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன், சட்ட விதிமுறைகளை மீறி நேற்று மாலை 6:00 மணிக்குமேல் தனது உறவினரின் சடலத்தை, புழுதிவாக்கம் சுடுகாட்டில் எரியூட்டியதோடு, சுடுகாட்டில் விளக்குகள் சரிவர எரியவில்லை, தி.மு.க., வை ஜே.கே., மணிகண்டன் தான் கவுன்சிலராக உள்ளார். தி.மு.க., என்றாலே நிர்வாகம் சரியாக இருக்காது என்பது போன்று சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தி.மு.க., கவுன்சிலர் ஜே.கே., மணிகண்டன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்
செய்தியாளர்களிடம் ஜே. கே.மணிகண்டன் கூறியதாவது:
புழுதிவாக்கம் சுடுகாட்டில் இருந்து மூன்றாவது தெருவில் தான் போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபனின் உறவினர் வீடு உள்ளது.
இந்நிலையில், அவர் இறந்த தனது உறவினரின் உடலை எரியூட்ட அனுமதி கேட்டபோது, சுடுகாடு ஊழியர்கள் மாலை 5:00 மணிக்குள் உடலை சுடுகாட்டிற்குள் கொண்டுவருமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
அதேபோல, மாலை 5:00 மணிக்குமேல், சுடுகாட்டில் எருயூட்டம் செய்யக்கூடாது அரசு ஆணை இருந்தும், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய த.வெ.க., போக்குவரத்துறை அமைச்சர் மாலை 6:15 மணிக்குதான், இறந்த தனது உறவினரின் சடலத்தை எரியூட்டம் செய்ய, சுடுகாட்டுக்கு எடுத்து வந்துள்ளார். இது சட்டப்படி தவறு.
இவர், சட்டத்தை மீறி செயல்பட்டதோடு, சுடுகாட்டில் இருந்தபடியே மின் விளக்குகள் சரியாக எரியவில்லை என, ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். இது ரீல்ஸ் வெளியிடும் இடமில்லை.
அதேபோல, அவர் கூறியது போல மின் விளக்குகள் எரியாமல் இல்லை. அனைத்து விளக்குகளும் நல்ல நிலையிலேயே எரிந்து வருகிறது. அதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. ஒரு விளக்கு மட்டும் புகை காரணமாக மங்கலாக எரிகிறது.
சட்டத்தை மீறி நேரம் தவறி உடலை எரியூட்டம் செய்ததோடு, நல்ல நிலையில் உள்ள மின்விளக்குகள் குறித்தும், தி.மு.க., அரசும் மீதும் தொடர்ந்து 4 வது முறையாக கவுன்சிலராக செயல்பட்டு வரும் என்னை பற்றியும் அவதூறு பரப்பி சுடுகாட்டில் இருந்தபடியே ரீல்ஸ் வெளியிட்டது கண்டிக்கத்தக்கது.
மேலும், அரிச்சந்திரன் சிலை அனைத்து சுடுகாட்டிலும், சுடுகாட்டுக்கு வெளியே இருப்பதுதான் பாரம்பரியம். ஆனால், தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சியில் இல்லாதவாறு, இவர்கள் ஆட்சியில் பாரம்பரியத்தை மீறி, அந்த சிலையை அகற்ற வேண்டும் என, ஒருவர் மாநகராட்சிக்கு புகார் மனு அளித்துள்ளார்.
என்னை பற்றி குறை கூற அமைச்சருக்கு எந்த தகுதியும் இல்லை. எனது மக்கள் சேவை குறித்து தெரிந்துக் கொள்ள வேண்டுமெனில், அவரின் உறவினரின் குடும்பத்தாரிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும் என்றும் முதல்வர் ஜோசப் விஜய் உடன் ஒரு படத்தில் போக்குவரத்து போலீசாக நடித்த அவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவி கொடுத்தால் இந்த நிலையில் தான் இருக்கும் என்று காட்டமாக விமர்சித்தார்.
