திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முப்பெரும் விழா, கரூர் மாவட்டத்தில் செப்டம்பர் 17, 2025 அன்று கொட்டும் மழையிலும் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த விழா, திமுகவின் கொள்கைக் கூட்டமாக, கூடிக் கலையும் சாதாரண கூட்டமல்ல என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் இருந்தனர்.
கூட்டத்தில் தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், இந்த முப்பெரும் விழாவில் உரையாற்றினார். அதே போல, ‘கூடிக் கலையும் கூட்டமல்ல, இது திமுகவின் கொள்கைக் கூட்டம். கொட்டும் மழையிலும் திரண்ட உடன்பிறப்புகளின் உற்சாகம், 2026 தேர்தல் வெற்றிக்கு வித்திடும்,” என்று அவர் தெரிவித்தார். மேலும், திமுகவின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், தமிழ்நாட்டின் பெருமையை உயர்த்தவும் இந்த விழா ஒரு மைல்கல் என்று குறிப்பிட்டார்.
கரூரில் தொடங்கிய இந்த உற்சாகம், தமிழ்நாடு முழுவதும் பரவி, திமுகவின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.“2026 வெற்றி கணக்கை இங்கிருந்து துவங்குவோம், வெல்வோம் 200 படைப்போம் வரலாறு எனவும் உதயநிதி ஸ்டாலின் தனது உரையில் வலியுறுத்தினார். கரூர் மாவட்டத்தின் நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், தொண்டர்களை ஒருங்கிணைத்து, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். “தமிழ்நாட்டை தலைகுனிய விடாமல், மக்களின் நம்பிக்கையை பெற்று, திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்,” என்று அவர் உறுதியளித்தார்.
இந்த விழாவில், திமுகவின் முக்கிய தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். உதயநிதி ஸ்டாலின், “வெல்வோம் வரலாறு, படைப்போம் வரலாறு” என்ற முழக்கத்துடன், 2026 தேர்தலில் 200 இடங்களை வென்று வரலாறு படைக்கும் இலக்கை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடதக்கது.