மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த துணிச்சலான கருத்துகளை வரவேற்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையில் பல்வேறு விதிமீறல்கள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் வாக்காளர் பதிவு மற்றும் தொழில்நுட்ப முறை முடிவுகள் தொடர்பாக 14 முறை முறையான ஆட்சேபனைகளை எழுப்பியதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில், ஐதராபாத் சட்டப் பல்கலைக்கழக விழாவில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான், ‘கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமையைப் பறித்து, அவர்களைச் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் எந்தவொரு தன்னிச்சையான நடவடிக்கையும் நமது அரசியலமைப்பின் ஆன்மாவையே தாக்குவதாகும்’ என்று ஆணித்தரமாகத் தெரிவித்தார். இதேபோல் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எப். நாரிமனும் ஜனநாயகத்தில் சாமானிய மக்களின் வாக்குரிமை நீர்த்துப்போகச் செய்யப்படுவது குறித்து வெளிப்படையாகக் கருத்து தெரிவித்திருந்தார்.
தேர்தல் செய்திகள்
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த இரண்டு நீதிபதிகளின் கருத்துகளையும் ஆதரித்து மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் மனு சிங்வி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில், ‘இரு நீதிபதிகளும் கூறியதில் புதிய விஷயம் எதுவும் இல்லை என்றாலும், உண்மையை உள்ளபடி வெளிப்படையாகப் பேசிய அவர்களின் அஞ்சாமை மற்றும் தைரியத்தை நான் முழு மனதோடு வரவேற்கிறேன்; வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படுவது மற்றும் வாக்குரிமை நீர்த்துப்போகச் செய்யப்படுவது மக்களாட்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்; இந்த விவகாரம் குறித்து மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் துணிச்சலாகக் குரல் கொடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.
