தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செயின்பறிப்பு வழக்கில் தொடர்புடையவர் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்று கீழே விழுந்து கையில்

எலும்பு முறிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியை சேர்ந்தவர் முத்தாட்சி (60). இவர் கடந்த 7-ந் தேதி மாலை ஸ்ரீநகர் காலனியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் 2 பேர் வேகமாக வந்துள்ளனர். இதில் பைக் பின்னால் அமர்ந்திருந்த நபர் முத்தாட்சி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த முத்தாட்சி கூச்சலிட்டார். ஆனால், அதற்குள் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு 2 பேரும் பைக்கில் தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து முத்தாட்சி கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தீபாவளிக்கு முதல்நாள் மாலையில் நடந்த இந்த சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை மேற்கு போலீசார் ஆய்வு செய்தனர். இதில் பைக்கில் வந்த நபர்களின் அடையாளங்களை போலீசார் சேகரித்தனர்.
தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இந்த செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கும்பகோணம் நீடாமங்கலம் சாலையை சேர்ந்த செல்வக்குமார் மகன் சிவா (36) என்பது தெரிய வந்தது.
உடன் போலீசார் சிவாவை பிடிப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றனர். அப்போது போலீசாரை கண்ட சிவா, அவர்களிடம் சிக்காமல் இருப்பதற்காக அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை விரட்டிச் சென்றபோது, தடுமாறி கீழே விழுந்தார். இதில் சிவாவுக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் சிவாவிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் தனது நண்பர் அம்பேத்கார் நகரை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் அசோக் (34) என்பவருடன் சேர்ந்து முத்தாட்சியிடம் நகை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அசோக்கையும் கைது செய்தனர்.
தொடர்ந்து இருவரும் கொடுத்த தகவலின் பேரில் 6 பவுன் தங்கச்சங்கிலியை வாங்கிய ஜான் பீட்டர் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 6 பவுன் தங்கச்சங்கிலியும் மீட்கப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட சிவா, அசோக், ஜான் பீட்டர் ஆகிய 3 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கீழே விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட சிவா, திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்களையும், திருடப்பட்ட நகையை வாங்கியவரையும் விரைந்து கைது செய்த போலீசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
