தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி இன்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. இதையடுத்து கரூர் மாவட்டம் முழுவதும் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப்பட்டிருந்த அரசு சாதனை விளம்பரங்கள், புகைப்படங்கள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த முதல்வர், துணை முதல்வர், முன்னாள் முதல்வர் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களை விளக்கும் பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டன.
மேலும் தேர்தலை முன்னிட்டு ஊடகங்களில் வெளியாகும் வேட்பாளர்களின் விளம்பரங்களை கண்காணிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊடக கண்காணிப்பு அறை தொடங்கப்பட்டுள்ளது. இதனுடன் தேர்தல் பிரச்சாரங்களுக்கு அனுமதி வழங்கும் மையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு, தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
