தூத்துக்குடியில் சூதாட்ட கிளப்புகள் அதிகரித்து வருவதாகவும், இதனை போலீசார் கண்டுகொள்ளாதது போல இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கடந்த காலங்களில் மறைவாக நடைபெற்று வந்த சூதாட்டம், தற்போது பெரிய கிளப்புகள் என்ற பெயரில் வெளிப்படையாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் இதுபோன்ற கிளப்புகள் திறக்கப்பட்டு, இரவு பகல் என எந்நேரமும் சூதாட்டம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு சான்றாக தூத்துக்குடியில் உள்ள கிளப் சார்பில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அதில் நுழைவு கட்டணம் ரூ.50ஆயிரம் முதல் வசூலிக்கப்படுகிறது. மேலும் ரூ.5லட்சம் வரை பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்று லட்சக்கணக்கில் பரிசு தொகை அறிவித்து வெளிப்படையாக சூதாட்ட போட்டிகள் நடத்தப்படுவது சட்டவிரோதம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதனை காவல்துறையினர் கண்டுகொள்ளாதது ஏன் எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
ஏற்கனவே ஆன்லைன் நம்பர் லாட்டரிகளால் பல குடும்பங்கள் சீரழிந்து வரும் நிலையில் தற்போது சூதாட்ட கிளப்புகள் அதிகரிப்பால் இளைஞர்கள், குடும்பத்தினர் பலர் கடன் சுமையில் சிக்கி வருவதாகவும், இதனை தடுக்க வேண்டும் எனவும் சமூக அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் டிஐஜியிடம் சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் புகார் மனு அனுப்பியுள்ளார்.
