திரைப்பட இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட டி.ராஜேந்தர், உயிருள்ளவரை உஷா என்ற திரைப்படத்தை இயக்கி, தயாரித்து, நடித்து, இசையமைத்திருந்தார். கடந்த 1983-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற இந்த படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் மிகவும் பிரபலமாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.
இந்த திரைப்படம் வெளியான 43 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட்டது. இந்த படத்தின் பாடல்களின் பதிப்புரிமை, ஆரம்பத்தில் ஏவி.எம். நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், பிறகு அது பல நிறுவனங்களுக்கு அது கைமாறியது தெரியவந்தது.
தற்போது, ‘உயிருள்ளவரை உஷா’ படத்தின் பாடல்களை பதிப்புரிமையை மீறி, வர்த்தக ரீதியாக பயன்படுத்த ஏவி.எம். மற்றும் டபிள்யூ.எல். எபிக் மீடியா ஆகிய நிறுவனங்களுக்கு தடை விதிக்கக் கோரி, படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் டி.ராஜேந்தர், அவரது மனைவி உஷா ராஜேந்தர் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி ஏவி.எம். மற்றும் டபிள்யூ.எல். எபிக் மீடியா ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

