உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி: கரூரில் திமுகவினர் சாலை மறியல்; 100-க்கும் மேற்பட்டோர் கைது
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கரூர் மாவட்டத்தில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வர் குறித்து தரக்குறைவாக பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

செய்யப்பட்டு, சென்னை சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்ட திமுக சார்பில் 100-க்கும் மேற்பட்டோர் கலைஞர் அறிவாலயத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா வரை ஊர்வலமாகச் சென்று,

தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
