திருப்பத்தூரில் ரேஷன் கடையில் அழுகிய வெங்காயம் விற்பனை!கட்டாயப்படுத்தி வெங்காயம் வாங்க வற்புறுத்துவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்து வருகிறது.
அதன்படி கடந்த செப்டம்பர் 3ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கச்சேரி தெரு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு பொதுமக்கள் கோதுமை மற்றும் வெங்காயம் வாங்குவதற்காக வந்துள்ளனர்.
அப்போது ரேஷன் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வெங்காயங்கள்அழுகிய நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் தரமற்ற நிலையில் உள்ள வெங்காயத்தை விற்பனை செய்வதாக வேதனை தெரிவித்தனர்.
மேலும் அழுகிய நிலையில் உள்ள வெங்காயத்தையும் கட்டாயப்படுத்தி வாங்குமாறு ரேஷன் கடை விற்பனையாளர் வற்புறுத்துவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
அரசு சார்பில் பொதுமக்களின் நலனுக்காக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் வெங்காயம் தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அழுகிய நிலையில் உள்ள வெங்காயங்களை உடனடியாக அகற்றி தரமான வெங்காயம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
