மதுரையில் புதிதாகத் திறக்கப்பட்ட நகைக்கடையில் நடந்த திருட்டு வழக்கில் முக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருடன் நகைக் கடைக்கு ஸ்கூட்டியில் வந்த காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
மதுரையில் திறக்கப்பட்ட நகை கடையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் 15 கிலோவுக்கு மேல் தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர், நகைக் கடையிலிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் பறந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் செயல்பட்டு வரும் புதிய நகைக்கடையில் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் மர்ம நபர் ஒருவர் புகுந்து 15 கிலோவுக்கு மேற்பட்ட தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றார். அதிகாலையில் நடைபெற்ற இச்சம்பவம் மதுரை மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரைப் பிடிப்பதற்காக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படையினர் இரவு முழுவதும் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர்
கொள்ளை நடந்த நகைக்கடையைச் சுற்றியுள்ள நேருநகர், மாடக்குளம், பழங்காநத்தம், நாகமலை புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
