Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தடுப்புச்சுவரை தாண்டி பாய்ந்த ஆம்புலன்ஸ் – 3 பேர் பலி-சோகம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் – சோழவந்தான் ரோடு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் மகன் சரவண கணேஷ், எலும்பு முறிவு சிகிச்சைக்காக ஜி.கே. மருத்துவமனையிலிருந்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு எஸ்.ஆர். ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன் அவரது நண்பர் பிரதீப் என்பவரும் சென்றுள்ளார்.

அதேவேளையில், தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது குடும்பத்தினர், ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் அவரது இளைய மகன் ஆதித்யாவை (19) விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரி விடுதியில் சேர்ப்பதற்காக காரில் ஈரோடு நோக்கி சென்றுள்ளனர். காரில் ஆதித்யா, அவரது தாய் சொர்ணலட்சுமி மற்றும் மூத்த சகோதரர் மூர்த்தி (21) ஆகியோர் பயணம் செய்துள்ளனர்.

அவர்கள் மதுரை விமான நிலைய சாலை, சொக்கநாதன்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, திருமங்கலத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த ஆம்புலன்ஸ் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ், சாலையின் தடுப்புச்சுவரை தாண்டி எதிர்த்திசையில் வந்த காரின் மீது மோதியுள்ளது.

எதிர்பாராதவிதமாக நடந்த இந்த கோர விபத்தில், ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட சரவண கணேஷ், அவரது நண்பர் பிரதீப் மற்றும் காரில் பயணம் செய்த கல்லூரி மாணவர் ஆதித்யா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், காரில் பயணம் செய்த சொர்ணலட்சுமி மற்றும் மூர்த்தி ஆகியோர் பலத்த காயமடைந்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆனந்த் மட்டும் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். தொடர்ந்து, காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த திருமங்கலம் நகர காவல்துறையினர், விபத்துக்கான காரணம், ஆம்புலன்ஸ் சென்ற வேகம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்புலன்ஸில் பயணித்த இருவரும், காரில் பயணித்த கல்லூரி மாணவரும் ஒரே விபத்தில் உயிரிழந்த சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!