அரியலூர் மாவட்டம் நானாங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சைப்பிள்ளை. இவரது மனைவி ராஜலட்சுமி வயது 35. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ராஜலட்சுமி கடந்த 24ஆம் தேதி வீட்டை விட்டு காணாமல் போனதாக, அரியலூர் மாவட்டம் தூத்தூர் காவல் நிலையத்தில் அவரது கணவர் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் காணாமல் போன ராஜலட்சுமியை தேடி வந்த நிலையில், அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள ஒதுக்குப் புறமான இடம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரற்ற சடலமாக ராஜலட்சுமி கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காணாமல் போனதாக கூறப்படும் ராஜலட்சுமிக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞன் பாலமுருகன் என்பவருக்கும் முறையற்ற உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
பாலமுருகன் நானாங்கூர் கிராமத்தில் ஆதார் அப்டேட் செய்யும் பணியை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. ராஜலட்சுமி தனது மகன்களுக்கும், கணவர் உள்ளிட்ட குடும்பத்தாருக்கும் ஆதார் அப்டேட் செய்ய அடிக்கடி பாலமுருகனிடம், சென்று வந்ததாக கூறப்படுகிறது.
நாளடைவில் இந்த பழக்கம் இருவருக்கும், முறையற்ற உறவாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 20-ம் தேதி இதை அறிந்த அவரது கணவர் பிச்சைப்பிள்ளை, ராஜலட்சுமியை கண்டித்துள்ளார். மேலும் 21-ஆம் தேதி காமரசவல்லி கிராமத்தில் உள்ள ராஜலட்சுமியின் சகோதரி வீட்டிற்கு கொண்டு சென்று, அவரை விட்டு கண்டித்து வந்துள்ளார் பிச்சைப்பிள்ளை.
இந்த நிலையில் 24-ம் தேதி பிச்சைப்பிள்ளை இல்லாத நேரத்தில், ராஜலட்சுமி நானாங்கூர் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். தனது உடைமைகள், நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ராஜலட்சுமி வீட்டில் இருந்து நகை பணம் உடைமைகளை எடுத்துச் சொல்வதை அவரது 12 வயது மூத்த மகன் நேரில் கண்டுள்ளார். இதனை எடுத்து ராஜலட்சுமி சென்றவுடன் தந்தைக்கு தகவலும் அளித்துள்ளார்.
பின்னர் வீடு வந்து பார்த்த பிச்சைப்பிள்ளை வீட்டில் இருந்தால் நகை பணங்கள் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தவுடன், ராஜலட்சுமி எங்கேயோ செல்கிறார் என்பதை அறிந்து காவல் துறையில் உடனடியாக புகார் மனுவும் அளித்துள்ளார்.
இந்த நிலையில் கீழப்பழுவூர் காவல் எல்லையில் பெண் ஒருவர் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருப்பதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராஜலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விட்டனர்.
மேலும் உயிரிழந்தவரின் புகைப்படத்தை whatsapp குழுக்களை பகிர்ந்து தகவல் அளிக்குமாறு, பொதுமக்களிடம் வேண்டுகோளும் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் நானாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பிச்சைப்பிள்ளையிடம் தகவல் தெரிவிக்கவே, விரைந்து வந்த பிச்சைப்பிள்ளை உயிரிழந்தது தனது மனைவி ராஜலட்சுமிதான் என்பதை அடையாளம் காட்டினார்.
மேலும் ராஜலட்சுமி தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகே, சற்று தள்ளி ஒரு பை ஒன்றும் இருந்துள்ளது. அதில் அவரது ஆதார் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளும் இருக்கப்பெற்றுள்ளன.
அதேபோன்று சற்றுத் தள்ளி பூமியின் அடியில் மணல் மூடி இருந்ததை அறிந்த காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில், அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது அதில் ராஜலட்சுமி நகைகள் இருந்தது கண்டறிந்து மீட்டு உள்ளனர்.
நானாங்கூர் கிராமத்தில் காணாமல் போன ராஜலட்சுமி, கீழப்பழுவூர் அருகே ஏன் வந்தார்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையில் திருமானூர் பகுதியில் இருந்து நானாங்கூர் வந்த இளைஞன் பாலமுருகனை, காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது நகை மற்றும் பணத்துடன் வீட்டிலிருந்து சென்ற ராஜலக்ஷ்மி பாலமுருகனுடன் இணைந்து திருப்பூர் சென்று வாழ்க்கை நடத்தலாம் என்ற எண்ணத்தில் பயணப்பட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகை நேரம் என்பதால் தற்போது பணிகள் ஏதும் இல்லை என்று, ஒரு சில நிறுவனங்களில் கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் என்ன செய்வது என்று யோசித்த பாலமுருகன், ராஜலட்சுமியிடம் மீண்டும் ஊருக்கே செல்வோம். நீ உனது வீட்டிற்கு செல் எனக் கூறியுள்ளார்.
உன்னை நம்பி, எனது கணவர் மற்றும் பிள்ளைகளை விட்டு வந்தேன். திடீரென மீண்டும் ஊருக்கு போகலாம் என்று சொல்கிறாயே என கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ராஜலட்சுமியை சமாதானம் செய்த பாலமுருகன், திருப்பூரில் இருந்து இருவரும் பேருந்து மூலம் அரியலூர் வந்துள்ளனர்.
இருவரும் ஒரே கிராமம் என்பதால் வேறு வேறு வழியாக செல்லலாம் என்று கூறி ராஜலட்சுமியை விட்டுப் பிரிந்து தனியே சென்றுள்ளார் பாலமுருகன். மீண்டும் வீடு திரும்பினால் நிச்சயம் ஊரார் முன்னிலையில் அசிங்கப்பட வேண்டும் என விரக்தியடைந்த ராஜலட்சுமி, கீழப்பழுவூர் சென்று ஒதுக்குப்புறமான மரத்தில் தூக்கில் தொங்கியதாக கூறப்படுகிறது.
இதனிடையே ராஜலட்சுமியை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி இளைஞன் பாலமுருகனை கீழப்பழுவூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஆதார் கார்டு அப்டேட் செய்ய சென்ற இடத்தில் வயதுக்கு மீறிய முறையற்ற காதலால், பெண் ஒருவர் உயிரிழந்ததும் இளைஞர் சிறை சென்றதும் அப்பகுதியில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
