அரியலூர் மாவட்டம், அரியலூர் நகரம், விளாங்கார தெருவைச் சேர்ந்த வேம்பு (வயது 64) க/பெ செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அரியலூர் காவல் ஆய்வாளர் மணமல்லி, காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவல்துறையினருடன் வேம்புவின் வீட்டினை சோதனை செய்தனர்.
சோதனையில்
320 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் (ஹான்ஸ் 260 கிலோ, விமல் பான்- 50 கிலோ மற்றும் பிற 10 கிலோ) முதலியவை பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் அரியலூர் மாவட்டம் காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்த முகமது பாசில் (வயது 24) த/பெ அலாவுதீன் என்பவர், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் நோக்கத்தில், வேம்பு வீட்டினை வாடகைக்கு எடுத்து, வேம்புவின் சம்மதத்துடன் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் வேம்பு மற்றும் முகமது பாசில் ஆகிய இருவரையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட மற்ற நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

