அரியலூர் சட்டமன்ற தொகுதியில் தனித்து திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தலா 5 முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், திமுக, அதிமுக, தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டாலும், திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளிடையே மீண்டும் நேரடியாக கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
திமுக வேட்பாளராக லதாபாலு என்பவர் நிறுத்தப்பட்டுள்ளர். அரியலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கட்சியில் நிறுத்தப்பட்ட முதல் பெண் வேட்பாளர் என்ற தகுதியை பெறுகிறார். ஒருங்கினைந்த பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களின் திமுக மாவட்ட மகளிரணி செயலாளராக இருந்து, தற்போது அரியலூர் மாவட்ட துணைச்செயலாளர் என்று கட்சிபதவியில் உள்ளார். போக்குவரத்து அமைச்சரும், அரியலூர் மாவட்ட அமைச்சருமான சிவசங்கரின் தீவிர ஆதரவாளர். கோஷ்டி பூசல்களில் சிக்காதவர், அமைதியானர் என்று கட்சியினரால் பார்க்கப்படுவதோடு, பெண் வேட்பாளர் என்பதால் பெண்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கும், எளிதாக பெண்கள் மத்தியில் ஊடுறுவி, மகளிர் உரிமைத்தொகை அதிகரிப்பு, பெண்களுக்கு வழங்கப்படும் எட்டாயிரம் ரூபாய் வீட்டுப்பொருள்கள் வங்க கூப்பன், கல்லூரி செல்லும் பெண்களுக்கான ஊக்கத்தொகை ஆகியவற்றை எடுத்துக்கூறி வெற்றிபெருவார் என்ற நம்பிக்கையுடன் தேர்தல் களத்தில் உற்சாகமாக வலம் வருகின்றனர்.
அதிமுக கூட்டணியில், அரியலூர் தொகுதில் அதிமுக வேட்பாளராக மூன்றாம் முறையாக முன்னால் அரசு கொறடா தாமரை.ராஜேந்திரன் போட்டியிடுகிறார். கடந்த 2016ம் ஆண்டு முதல்முறையாக வெற்றிபெற்ற கையோடு ஒரத்தநாடு வைத்தியலிங்கம் ஆதரவில், முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அரசு கொறடாவாக அறிவிக்கப்பட்டு கட்சியில் அறிமுகமானவர். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி மத்தியஅரசிடம் இருந்து ஒரே நேரத்தில் பெற்ற 11மருத்துவகல்லூரிகளில் ஒன்றாக, அரியலூருக்கு மருத்துவகல்லூரி மருத்துவமனையை பெற்றுத்தந்ததை சாதனையாக கூறிவருகிறார். கடந்த தேர்தலில் 3234 வாக்குகளில் பெற்ற தோல்வியை சரிகட்டும் வகையில் மூன்றாம் முறையாக போட்டியிடும் தற்போது, வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற முணைப்பில், தான் சட்டமன்ற உறுப்பினராக செயலாற்றியபோது செய்ய சாதனைகளையும், பணிகளையும் பட்டியிலிடுவதோடு, தான் கொண்டு வந்த கொள்ளிடம் ஆற்றில் 850கோடி மதிப்பீட்டில் கதவனையுடன் கூடிய தடுப்பனையை, முதலமைச்சர் மு.க.ஸ்டலின் அரசு கிடப்பில் போட்டதாக குற்றம்சாட்டுவதோடு, மீண்டும் வெற்றிபெற்று விவசாயிகளின் நலன் காக்கும் இத்திட்டத்தை செயல்படுத்துவேன் என்பதுடன் மேலும் பல வாக்குறுதிகளை தெரிவித்து தொகுதியை சுற்றி வருகிறார். மேலும் கடந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்ட தொல்.திருமாவளவன் வெற்றி பெற்றாலும், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும், தொல்.திருமாவளவனுக்கு கிடைத்த வாக்குகளை விட அதிமுக சுமார் 15ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றதால் வெற்றி நிச்சயம் என்ற மனஉறுதியுடன் களம் காணுகிறார் அதிமுக வேட்பாளர் தாமரை.ரா«ஐந்திரன்.
விஜயின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சிவக்குமார் போட்டியிடுகிறார். விஜய் ரசிகர் மன்றம் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை தொடர்ந்து பயணித்து வருவதால் விஜய் ரசிகர்களிடையே நன்கு பரிச்சமானர். எனவே விஜய் ரசிகர்களின் வாக்கும், விஜய்க்காக தற்போது இளைஞர்கள் செலுத்தும் வாக்குகள் மட்டுமே இவரின் சதவீத கணக்கை காட்டும்.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் புகழேந்தி, மண்சார்ந்த அரசியலை முன்னிலைப்படுத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தொகுதி மக்களிடையே அதிகம் பரிச்சமானவர் இல்லை என்பதால் சீமானுக்கு கிடைக்கும் வாக்குகள் மட்டுமே இவரின் வாக்குகளாக அமையும்.
அதிமுக திமுகவிற்கு இடையே கடும் போட்டி எழுந்துள்ள நிலையில், கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட சரிவை மீட்டெடுத்து, அரியலூர் திமுகவின் கோட்டை என்பதை நிறுபித்து வெற்றி பெற்றாக வேண்டும் என்ற தீவிரத்தில் தனது அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு திமுக வேட்பாளர் லதாபாலுவிற்கு ஆதரவு திரட்டி வருகிறார் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர். மேலும் 2016ம் ஆண்டு தேர்தலில் தன்னை தோற்கடித்த அதிமுக தாமரை.ராஜேந்திரனை இம்முறை தேல்வியுறச் செய்யவேண்டும் என்று தீவிரம் கட்டி வருகிறார் சிவசங்கர். அதேவேளையில் கடந்த முறை பெற்ற தோல்வியை, தற்போது வெற்றியாக மாற்றிட வேண்டும் என்றும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த வாக்குகளை விட அதிக வாக்குகளை பெற்று தொகுதியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று தொகுதியை வலம் வரத் தொடங்கி விட்டார் தாமரை.ராஜேந்திரன்.
அரியலூர் சட்டமன்ற தொகுதி சிவசங்கரா, தாமரை.ராஜேந்திரனா என்பதே களத்தின் சூழ்நிலை என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

