அரியலூர்… தவெக தேர்தல் வாக்குறுதிப்படி விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என கைகளில் ஏர்க்கலப்பை ஏந்தி, எள், கடலை, நெற்கதிர்களை ஏந்தி அரியலூரில் விவசாயிகள் போராட்டம்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், அரியலூர் பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு அரசைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் திரளான பெண் விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கைகளில் ஏர்க்கலப்பை மற்றும் கருகிய பயிர்களை ஏந்தி தங்களின் வாழ்வாதாரத்தை உடனடியாக தமிழ்நாடு அரசு காக்கக் கோரி கண்டன முழக்கமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விசுவநாதன்…
தவெகவின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஐந்து ஏக்கருக்குக் கீழ் நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு முழுப் பயிர்க்கடனும், ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதக் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என மிகத் தெளிவாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய அறிவிப்போ ஒட்டுமொத்த விவசாய சமூகத்தையும் ஏமாற்றும் வகையில் அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
அரசு தற்போது வெளியிட்டுள்ள பகுதி வாரியான அடுக்கு முறை (Slab system) தள்ளுபடி திட்டத்தை அவர் கடுமையாக சாடினார். இத்திட்டத்தின் படி:
ரூ. 50,000 கடன் பெற்றவர்களுக்கு — ரூ. 50,000 தள்ளுபடி
ரூ. 60,000 கடன் பெற்றவர்களுக்கு — ரூ. 40,000 தள்ளுபடி
ரூ. 70,000 கடன் பெற்றவர்களுக்கு — ரூ. 30,000 தள்ளுபடி
ரூ. 80,000 கடன் பெற்றவர்களுக்கு — ரூ. 20,000 தள்ளுபடி
ரூ. 90,000 கடன் பெற்றவர்களுக்கு — ரூ. 10,000 தள்ளுபடி
ரூ. 1 லட்சத்திற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு — வெறும் ரூ. 5,000 மட்டுமே தள்ளுபடி
என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பித்தலாட்டம் என்று அவர் சாடினார்.
விவசாயிகளின் முதுகெலும்பை ஒடித்துவிட்டனர். இந்த புதிய கணக்கீடு முறையானது பாடுபடும் விவசாய பெருமக்களைக் கேலி செய்யும் விதமாக உள்ளதாகக் கூறிய அவர், “இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு அரசு போடும் பிச்சையைப் போலத் தோன்றுகிறது.
தேர்தலின் போது வாக்கு கேட்டு வந்தபோது ‘விவசாயிகள் தான் இந்த நாட்டின் முதுகெலும்பு’ என்றும், ‘விவசாயமே தனது உயிர்’ என்றும், ‘அடுத்த ஜென்மத்தில் விவசாயியாகப் பிறக்க ஆசை’ என்றும் பேசியவர்கள், இன்று தங்களின் தன்னிச்சையான முடிவுகளால் விவசாயிகளின் முதுகெலும்பை ஒடித்துள்ளனர்” என்று ஆவேசமாகக் கூறினார்.
மேலும், உலகிற்குச் சோறிடும் முதன்மைத் தொழிலாக விளங்கும் விவசாயத்தை விட, விளையாட்டுத் துறைதான் மிகவும் கடினமானது எனப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கருத்துக்கும்அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
விவசாய நிலத்தில் இறங்கிப் பாடுபடாதவர்களுக்கே இது போன்ற எண்ணங்கள் தோன்றும் என்றும் சாடினார்.
எனவே, அரசு உடனடியாகத் தனது தற்போதைய அறிவிப்பைத் திரும்பப் பெற்று, தேர்தல் வாக்குறுதி அளித்தபடி அனைத்து விவசாயிகளின் முழுப் பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என இப்போராட்டத்தின் வாயிலாக வலியுறுத்தப்பட்டுள்ளது.