Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திரிணாமுல் பெண் எம்பிக்கு எதிரான கைது வாரண்ட் ரத்து

திரிணாமுல் பெண் எம்பிக்கு எதிரான கைது வாரண்ட் ரத்து

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் கிருஷ்ணாநகர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, பெண்களுக்கு எதிராக அவதூறாக பேசியதாகவும், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாகவும் கூறி நதியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகாததால் அவருக்கு எதிராக கிருஷ்ணாநகர் 3வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து மஹுவா மொய்த்ரா கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி பிடிவாரண்டுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் தேபாங்சு பசாக் மற்றும் ஆர்யக் தத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மஹுவா மொய்த்ரா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை; அவர் எம்.பி.யாக இருக்கும் காலத்தில் கூறப்பட்ட புகார் என்பதால் இதனை சிறப்பு நீதிமன்றம் மட்டுமே விசாரிக்க தகுதி உடையது’ என்று வாதிட்டார்.

இதையடுத்து கிருஷ்ணாநகர் மாஜிஸ்திரேட் பிறப்பித்த பிடிவாரண்ட்டை நீதிபதிகள் முற்றிலும் ரத்து செய்தனர். மேலும், மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, இந்த வழக்கை பிதான்நகரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

error: Content is protected !!