சேலத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி மணி (40) என்பவர் கோவை சாய்பாபா காலனி அருகே தனது இரு மனைவிகளுடன் தங்கி வேலை செய்து வருகிறார். அவர் கூனிமூக்கு பகுதியில் இருந்து வேலைக்காக அழைத்து வந்த அடையாளம் தெரியாத 40 வயது வாலிபர் ஒருவரை மாலை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மின் தடையைப் பயன்படுத்தி அந்த வாலிபர் மணியின் மனைவியைக் கட்டிப்பிடித்ததால், மணி அவரை எச்சரித்து அனுப்பியுள்ளார்.
மறுநாள் இரவும் மணி தூங்கியதாக நினைத்து மீண்டும் வீட்டிற்குள் புகுந்த அந்த வாலிபர், மணியின் மனைவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதைத் தூங்குவது போல் நடித்துக் கண்காணித்துக் கொண்டிருந்த மணி, ஆத்திரமடைந்து கட்டையால் அந்த வாலிபரைச் சரமாரியாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அவரது உடலைத் தடாகம் சாலையில் வீசிவிட்டு மணி வீட்டிற்குத் திரும்பியுள்ளார். உடலைக் கைப்பற்றிய சாய்பாபா காலனி போலீசார், மணியைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
