அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே நள்ளிரவில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட காவலர்கள் இருவர் மீது 3 இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தளவாய் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் ராஜாகண்ணு, ஊர்க்காவல்படை வீரர் வெங்கடேசன் ஆகியோர் ரோந்து பணியில் இருந்த போது சிலப்பனூர் பகுதியில் மது அருந்தியவர்களை கண்டித்துள்ளனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது போதையில் இருந்த 3 பேரும் காவலர் ராஜாக்கண்ணு மற்றும் ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசனை சரமாரியாக தாக்குதல் நடத்தி தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இதனை அந்த வழியே சென்ற பொதுமக்கள் பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த காவலர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக மதிவாணன், தாமரை கண்ணன், இளம்பரிதி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரோந்து பணியில் இருந்த காவலர்களை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
