Skip to content

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்.. நடந்தது என்ன?

  • by Authour

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் கபடிப் போட்டி பஞ்சாப் மாநிலம் குருகாஷி பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் தமிழகத்தில் இருந்து கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் உட்பட 4 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை. அணிக்கும், பிகார் மாநிலம் தர்பாங்கா பல்கலை. அணிக்குமிடையே காலிறுதிப் போட்டி நடைபெற்றது. அப்போது, எதிரணி வீராங்கனைகள் தவறாக விளையாடியதாக அன்னை தெரசா பல்கலை. அணி வீராங்கனைகள் நடுவர்களிடம் முறையிட்டனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறியது. அப்போது, தமிழக வீராங்கனைகளை எதிர் அணியினர் தாக்கியதில் ஒரு வீராங்கனை காயமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து நடுவரிடம் முறையிடச் சென்றபோது, அவரும் தமிழக வீராங்கனைகளைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த சம்பவத்தையடுத்து போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அன்னை தெரசா மகளிர் பல்கலை. துணைவேந்தர் கே.கலா கூறும்போது, “கபடிப் போட்டியின்போது ஏற்பட்ட பிரச்சினைகள் பேசி முடிக்கப்பட்டு விட்டன. போட்டியில் வெற்றிபெறுவதைவிட மாணவிகள் பாதுகாப்பாக ஊர் திரும்பினால் போதும்” என்றார். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக துணை முதல்வரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது.. போட்டியின்போது புள்ளிகள் தொடர்பாக அணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் உருவானது. தமிழக வீராங்கனை மீது தாக்குதல் நடந்ததாக புகார் வந்ததையடுத்து, தொலைபேசிவாயிலாக தொடர்பு கொண்டு பேசினோம். புகார் அடிப்படையில், பயிற்சியாளர் பாண்டியராஜனை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு முதல்வர் அறிவுறுத்தினார். மாணவிகள் தற்போது டில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பயிற்சியாளரையும் காவல் துறையினர் விடுவித்துள்ளனர். மாணவிகளுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்துள்ளோம். தற்போது அங்கு பதற்றமான சூழல் இல்லை. அனைவரும் பத்திரமாக இருக்கின்றனர். யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம். யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை. முதலுதவி மூலமாகவே காயங்கள் சரி செய்யப்பட்டுவிட்டன. வருங்காலங்களில் மாணவிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

error: Content is protected !!