Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விழுப்புரம் அருகே 7 வயது சிறுமியைக் கடத்த முயற்சி-பரபரப்பு

விழுப்புரம் அருகே 7 வயது சிறுமியைக் கடத்த முயற்சி-பரபரப்பு

விழுப்புரம் அருகே 7 வயது சிறுமியைக் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே உள்ள கண்டமாடி கிராமத்தைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துநர் அருணின் 7 வயது மகள், நேற்று இரவு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, ஸ்கூட்டியில் வந்த இரண்டு மர்ம நபர்கள், சிறுமியைக் கடத்தி இருசக்கர வாகனத்தின் நடுவில் அமர வைத்து அங்கிருந்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, அவர்களில் ஒருவரின் கையைக் கடித்துக் கூச்சலிட்டுள்ளார்.

இதையடுத்து, சிறுமியுடன் சுமார் 300 மீட்டர் தூரம் சென்ற மர்ம நபர்கள், அவரை அங்கேயே இறக்கிவிட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சிறுமியின் குடும்பத்தினர் உதவி எண்ணின் மூலம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் டிஎஸ்பி மற்றும் விழுப்புரம் தாலுகா காவல்துறையினர், சிறுமியைக் கடத்த முயன்ற சம்பவம் குறித்து இரவோடு இரவாகத் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், அந்தக் கிராமத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் அருகே சாலையோரத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி, சிறுமியைக் கடத்த முயன்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலமூண்டி கிராமத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவம் நடைபெற்று 32 நாட்களாகியும் இதுவரை சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசாரும் கடந்த 22 நாட்களாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு 7 வயது சிறுமியைக் கடத்த முயன்ற சம்பவம் விழுப்புரம் மாவட்ட மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!