கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 15 ஆண்டுகளாகப் பணியாற்றிய இரவு நேர காவலருக்கு வேலை மறுப்பு? ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறை பாதுகாப்பையும் மீறி டீசல் ஊற்றி தற்கொலை முயற்சி.
கரூர் மாவட்டம், கட்டளை பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (33), இவர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 15 ஆண்டுகளாக இரவு நேரக் காவலராகப் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், சாதிய பாகுபாடு காட்டியும், ஏற்கனவே விபத்து காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் நடக்க இயலவில்லை எனக் கூறியும், அவரைப் பணியில் அமர்த்த

வேண்டாம் என்று ஒப்பந்த நிறுவனம் எடுத்திருக்கும் தனியார் நிறுவன மேலாளர் பாலாஜி மற்றும் பிரபு ஆகியோர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காததால். இதனால் மனமுடைந்த ரஞ்சித், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டீசலை உடலில் ஊற்றித் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையடுத்து, செய்தியாளர்கள் டீசல் கேனை தட்டி விட்டனர், பின்னர் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாகத் தண்ணீர் ஊற்றி அவரை ஆசுவாசப்படுத்தினர். தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறையினர் அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், பலத்த காவல்துறை பாதுகாப்பையும் மீறி டீசல் கேனுடன் வந்து ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
