சிவகாசியில் உணவு பாதுகாப்பு விதி முறைகளை மீறிய பிரபல பிரியாணி கடைக்கு தடை விதித்த அதிகாரிகள் சிக்கன், புரோட்டா மாவு உள்பட 51 கிலோ பழைய உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் தலைமையில், அலுவலர் குழுவினர் திருத்தங்கல்லில் உள்ள பிரபல பிரியாணி கடையில் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது நேற்று முன்தினம் சமைத்து மீதமான சிக்கன், சாதம், நூடுல்ஸ், கிரேவி வகைகள், புரோட்டா மாவு உள்ளிட்ட 51 கிலோ பழைய உணவு பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
தண்ணீர் பகுப்பாய்வறிக்கை, எண்ணெய் பகுப்பாய்வறிக்கை, சீரான கால இடைவெளியில் மேற்கொண்ட உணவு பகுப்பாய்வறிக்கை, பணியாளர்களுக்கான மருத்துவ தகுதி சான்றிதழ், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட பூச்சி தடுப்பு முறைக்கான சான்று, உணவு பாதுகாப்பு குறித்து பணியாளர்களுக்கான பயிற்சி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டது.
அதிக ஆபத்தான அசைவ உணவு பொருட்களை கழிவுநீர் வடிகால் மீது வைத்து தயார் செய்ததும் கண்டறியப்பட்டது. பொதுமக்களின் பொது சுகாதார நலன் கருதி, சம்பந்தப்பட்ட பிரியாணி கடையின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை தற்காலிகமாக இடைநீக்கம் செய்து உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மசாலாவிலிருந்து உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பி, அதன் அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சுகாதாரமற்ற சூழலில் உணவு பொருட்களை தயாரித்ததற்கும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
