Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கேஸ் கட்டர் மூலம் மீட்கப்பட்ட சடலங்கள்! செல்ஃபி மோகம்- பறிபோன 4 உயிர்கள்

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி அருகே பிரயாக்ராஜ்-வாரணாசி நெடுஞ்சாலையில் உள்ள ரூபாபூர் மேம்பாலத்தில் காரை நிறுத்திவிட்டு செல்பி எடுத்து கொண்டிருந்த 4 இளைஞர்கள், பின்னால் வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விந்தியாச்சல் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு திரும்பிய 7 நண்பர்கள் காரின் முன்பாக நின்று செல்பி எடுத்தபோது, அதிவேகமாக வந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியதில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மற்ற 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாரணாசியின் சிவ்புரி பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் குழுவினர், மிர்சாபூரில் உள்ள விந்தியவாசிணி கோயிலுக்குச் சென்றுவிட்டு எஸ்கார்பியோ காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். திங்கள்கிழமை (அக்டோபர் 19, 2026) காலை, பிரயாக்ராஜ் – வாரணாசி நெடுஞ்சாலையில் உள்ள ரூபாப்பூர் அருகே உள்ள மேம்பாலத்தில் காரை நிறுத்தியுள்ளனர்.

காரில் இருந்து கீழே இறங்கிய இளைஞர்கள், மேம்பாலத்தின் ஓரத்தில் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். அப்போது, பிரயாக்ராஜ் திசையில் இருந்து அதிவேகமாக வந்த லாரி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து நின்றுகொண்டிருந்த எஸ்கார்பியோ காரின் பின்பகுதியில் பலமாக மோதியதுடன், அருகில் நின்றுகொண்டிருந்த இளைஞர்கள் மீதும் ஏறி இறங்கியது.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை ‘கேஸ் கட்டர்’ (Gas cutter) உதவியுடன் மீட்டனர்.

இந்தக் கொடூர விபத்தில் அமன் யாதவ், கோலு யாதவ், அலோக் மிஸ்ரா ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த 4-வது நபரின் அடையாளத்தைக் கண்டறியும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

படுகாயமடைந்த கனையா யாதவ், நிகில் குமார் மற்றும் அடையாளம்தெரியாத மற்றொரு இளைஞர் ஆகிய 3 பேரும் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கனையா யாதவ் மற்றும் நிகில் குமார் ஆகிய இருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிய லாரி ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!