சென்னை தண்டையார்பேட்டை இளைய முதலி தெருவில் உள்ள பூங்காவில் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
சென்னை மாநகராட்சி மண்டலம் 4, 40-வது வார்டுக்கு உட்பட்ட இப்பூங்காவில், நம்மையா மேஸ்திரி தெருவைச் சேர்ந்த குமார் (63) என்பவர் கடந்த ஓராண்டாகப் பூங்காவைச் சுத்தம்

செய்தல் மற்றும் பெருக்குதல் உள்ளிட்ட தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று வழக்கம்போல் பணிக்கு வந்த குமாருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பூங்காவில் உள்ள அறையில் அமர்ந்திருந்த அவர், சிறிது நேரத்தில் மயக்க நிலையில் இருந்துள்ளார். இதைக் கவனித்த சக ஊழியர்கள் அவரைத் தட்டி எழுப்ப முயன்றபோது, அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, போலீசார் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவப் பணியாளர்கள் குமாரைப் பரிசோதித்தபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனால் அங்கிருந்த சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குமாரின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, குமார் உயிரிழந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவரது மனைவி சகிலா, இரண்டு மகன்கள் மற்றும் உறவினர்கள், அவரது உடலைப் பார்த்துக் கதறி அழுதனர். குடும்பத்தினரும் உறவினர்களும் கண்ணீர்விட்டு அழுத காட்சி அங்கிருந்தவர்களின் நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது.
பூங்காவில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து அறிந்த பொதுமக்கள் பூங்கா அருகே திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
