Skip to content

மூட்டையில் பிணம்: அடையார் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம் – 5 பேர் சிக்கினர்

சென்னை அடையார், இந்திரா நகர் பகுதியில் கடந்த 26-ம் தேதி சாலை ஓரம் கிடந்த சாக்கு மூட்டையிலிருந்து ரத்தம் வழிவதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த அடையார் போலீசார், அந்த மூட்டையைப் பிரித்துப் பார்த்தபோது, தலை மற்றும் முகத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் வடமாநில வாலிபர் ஒருவர் பிணமாகக் கிடந்தது தெரியவந்தது.

தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், இருவர் மோட்டார் சைக்கிளில் மூட்டையைக் கொண்டு வந்து வீசி சென்றது உறுதியானது. கொல்லப்பட்ட வாலிபரின் பாக்கெட்டில் இருந்த செல்போன் எண்களை ஆய்வு செய்தபோது, அவர் பீகாரைச் சேர்ந்த கவுரவ் குமார் (24) என்பதும், தரமணியில் உள்ள பாலிடெக்னிக்கில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

இந்த வழக்கு தொடர்பாக கவுரவ் குமாரின் நண்பர் உட்பட 5 பேரைப் பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அதில், கவுரவ் குமாரை மட்டுமின்றி, அவரது மனைவி முனிதா குமாரி மற்றும் குழந்தையையும் கொலை செய்து உடல்களைக் கூவம் ஆற்றில் வீசிவிட்டதாகக் கைதானவர்கள் தெரிவித்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, கூவம் ஆற்றுப் பகுதிகளில் மற்ற இரு உடல்களைத் தேடும் பணியைப் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இக்கொலை தொடர்பாக பீகாரைச் சேர்ந்த சிகந்தர், நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஸ் உட்பட 5 பேரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!