அய்யனார்குளம் பட்டி கிராமத்தில் உள்ள தோட்டத்துக் கிணற்றில் சுமார் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கயிற்றில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் அய்யனார்குளம் பட்டி கிராமத்தில் உள்ள குளத்தூரான் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில், சுமார் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கயிற்றில் சடலமாகத் தொங்குவதைக் கண்டு அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள், கிணற்றில் தொங்கிய சடலத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட சடலம் ஆம்புலன்ஸ் மூலம் பிரேதப் பரிசோதனைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இறந்து போன நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து, செய்துங்கநல்லூர் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணிபுரிந்து வரும் வடமாநிலத் தொழிலாளர்களிடம் காவல்துறையினர் அப் புகைப்படத்தைக் காண்பித்து, உயிரிழந்த நபர் குறித்த தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
