புதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்திலிருந்து 10 பள்ளி மாணவிகள் கீழே விழுந்து காயமடைந்த சம்பவத்தில், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலிருந்து தினசரி ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் புதுக்கோட்டையில் உள்ள பள்ளிகளுக்குப் பயிலச் சென்று வருகின்றனர். வழக்கம்போல பள்ளிகளுக்குச் செல்வதற்காக, புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரங்கம்மாள் சத்திரம் என்ற இடத்தில், பழங்குடியின பள்ளி மாணவிகள் 8-ஆம் வழித்தடத்தில் ஏறியுள்ளனர்.
இதையடுத்து கூட்ட நெரிசல் காரணமாகப் படிக்கட்டில் பயணம் செய்த 10 பழங்குடியின மாணவிகள் பேருந்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். காயமடைந்த நிலையில் அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், பேருந்தில் அளவுக்கு அதிகமான கூட்டத்தை ஏற்றியது, பாதுகாப்பற்ற முறையில் பேருந்தை இயக்கியது மற்றும் அலட்சியமாகச் செயல்பட்டது ஆகியவை விசாரணையில் தெரியவந்ததையடுத்து, முதற்கட்டமாகப் பணியில் அலட்சியம் காட்டியதற்காக பேருந்தின் ஓட்டுநர் அர்ஜுனன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் மற்றும் தற்காலிக நடத்துநர் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து, பாதுகாப்பு விதிமீறல் மற்றும் அலட்சியமாகச் செயல்பட்ட குற்றத்திற்காகத் தற்போது இருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.
