ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது பிரதமர் மோடியை அவதூறாக பேசிய பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23ம் தேதி நடந்த போராட்டத்தின் போது, பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறான மற்றும் ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக நொய்டா செக்டார் 168 பகுதியைச் சேர்ந்த ருச்சிகா சிங் என்ற பெண் மீது புகார் எழுந்துள்ளது.
காசியாபாத்தைச் சேர்ந்த ஸ்மிருதி சிங் என்பவர் அளித்த புகாரின் பேரில், நொய்டா எக்ஸ்பிரஸ்வே போலீஸ் நிலையத்தில் ‘ஜீரோ எஃப்.ஐ.ஆர்’ பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் அரசியலமைப்பு பதவியின் கண்ணியத்திற்கு கலங்கம் விளைவிக்கும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நோக்கத்திலும் அவர் பேசியதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் பிஎன்எஸ் சட்டத்தின் 352, 353(1) மற்றும் 356(1) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து நொய்டா கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் மனிஷா சிங் கூறுகையில், ‘பிரதமருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக காசியாபாத் ெபண் அளித்த புகாரின் பேரில் நொய்டா பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஜீரோ எஃப்.ஐ.ஆர் என்பதால், மேல் விசாரணைக்காக இந்த வழக்கு டெல்லி போலீசாருக்கு மாற்றப்படும்’ என்று தெரிவித்தார்.
