தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களில் நாட்டின் எஞ்சிய பகுதிகளில் இருந்து தென்மேற்குப் பருவமழை முழுவதுமாக விலகுவதற்கான சூழல் உருவாகி வருகிறது. அதே நேரத்தில் வடகிழக்குப் பருவமழை தென்னிந்தியாவின் தென்பகுதிகளில் தொடங்குவதற்கான சாதகமான நிலை காணப்படுகிறது.
சுமார் 3.1 கிமீ உயரம் வரை தெற்கு ஸ்ரீலங்கா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 3.1 கிமீ உயரம் வரை தெற்கு ஸ்ரீலங்கா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து மத்திய வங்கக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இந்நிலையில், இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
நாளை ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருவண்ணாமலை, கல்லக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல் இன்று முதல் 17.10.2026 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. இன்று முதல் 15.10.2026 வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு / அதிகாலை நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
