ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று நடைபெற்ற 59-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுடன் மோதியது. அதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் லக்னோ அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியமால் சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. சென்னை அணியில் ருதுராஜ் 13 ரன்கள், சாம்சன் 20 ரன்கள், உர்வில் படேல் 6 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் அடுத்து களமிறங்கிய கார்த்திக் சர்மா அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டார். சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்த அவர் 71 (42) ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய பிரேவிஸ் 25 (16) ரன்களும், ஷிவம் துபே 32 (16) ரன்களும் எடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மகராஜ் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணியின் சார்பில் மிட்செல் மார்ஷ் மற்றும் ஜோஸ் இங்லிஷ் ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக ரன்கள் குவிக்க தொடங்கிய இந்த ஜோடி, அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தியது. இந்த ஜோடியில் மிட்செல் மார்ஷ் 21 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஜோஸ் இங்லிஷ் 36 (32) ரன்களில் கேட்ச் ஆன நிலையில், தனது அதிரடியால் மிரட்டிக்கொண்டிருந்த மிட்செல் மார்ஷ் 90 (38) ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய அப்துல் சமத் 7 (3) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் வாணவேடிக்கை காட்டிய நிகோலஸ் பூரன் 32 (17) ரன்களும், முகுல் சவுத்ரி 13 (10) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் லக்னோ அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் சார்பில் முகேஷ் சவுத்ரி, ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றிபெற்றது.
