கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தன்னிடம் இருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு குறித்து தகவல் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய முதல் நாளில், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி எஸ்.சாந்தியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின் திறந்த ஜீப்பில் ரோடு ஷோ சென்ற அவருக்கு சாலையின் இருபுறமும் திமுகவினரும் மக்களும் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் அவரது சொத்து மதிப்பு குறித்து தெரிவித்துள்ளார். அதன்படி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம், அசையும் சொத்து மதிப்பு ரூ.3.30 கோடி, அசையா சொத்து மதிப்பு ரூ.4.34 கோடி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தனது மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் ரூ.1.32 கோடி அசையும் சொத்தும், 90 சவரன் நகையும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

