Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நாளை நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நடைபெற்றுவருகிறது. சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு விழா பூச்சொரிதலுடன் கடந்த மார்ச் 8ம் தேதி தொடங்கியது. மும்மூர்த்திகளை நோக்கி மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், இத்தலத்தில் தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லா விதமான நோய்களும் நீங்கவும், சகல சவுபாக்கியங்களும் கிடைக்க மாரியம்மன் பக்தர்களுக்காக 28 நாள் பச்சைப் பட்டினி விரதம் இருப்பது சிறப்பம்சமாகும். பூச்சொரிதலையொட்டி வாரந்தோறும் ஞாயிற்று கிழமைகளில் பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து பூக்களை அலங்கார வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.

இதையடுத்து சித்திரை தேர்த் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. நேற்று அம்மன் பல்லக்கில் வீதி உலாவாக ஆதிமாரியம்மன் கோயிலுக்கு சென்றார். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் நாளை(14ம் தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை தேருக்கு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி சிறப்பு பூஜையுடன் நடந்தது. தொடர்ந்து நாளை காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது. திருச்சி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நாளை கூடுவார்கள் என்பதால் சமயபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு தேவையான குடிநீர், தற்காலிக கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணிகளுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் நாளைகுவிக்கப்படுகின்றனர். பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் பால்குடம், அலகு, அக்னிசட்டி போன்றவற்றை எடுத்து வருவார்கள் என்பதால் பிரதான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க மாற்று பாதைகளில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்ய்பட்டுள்ளது. தேரோட்டம் முடிந்து 8ம் நாளான 21ம் தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடுடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் ஆணையர் சூரியநாராயணன் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

error: Content is protected !!