‘ட்ரிபிள்ஸ்’ தாண்டி ‘ஃபோர் பிளஸ்’ ; கோவையில் ஒரே டூ-வீலரில் ஆபத்தான முறையில் பறந்த 4 பள்ளி மாணவர்கள் – சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் !!!
ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க் பகுதியில் அரங்கேறிய விபரீத சாகசம் – லைசென்ஸ் இல்லாமல் சுற்றும் சிறுவர்கள் மீது ஆக்ஷன் எடுக்குமா போலீஸ் ?
கோவை, ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க் பகுதியில் பள்ளி மாணவர்கள் சிலர் போக்குவரத்து விதிகளைத் துச்சமாக மதித்து, சாகசம் என்ற பெயரில் உயிரைப் பணையம் வைத்து டூ-வீலரில் சென்ற அதிர்ச்சி வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி அதிர வைத்து உள்ளது.
கோவை, நேரு வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்கள், பள்ளி சீருடையுடன் ஒரே இருசக்கர வாகனத்தில் ஏறி, நகரின் மிக முக்கிய காந்தி பார்க் சாலையில் தங்களது வாகனத்தை இயக்கிச் சென்று உள்ளனர்.
டூ-வீலரில் ‘ட்ரிபிள்ஸ்’ செல்வதே சட்டப்படி குற்றம் என்னும் போது, இந்த மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி, ஹெல்மெட் கூட அணியாமல், ஒரே வண்டியில் நான்கு பேராக அமர்ந்து மற்ற வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் ஆபத்தான முறையில் வளைவுகளில் சென்று உள்ளனர்.
பின்னால் காரில் வந்த வாகன ஓட்டி ஒருவர், இந்த மாணவர்களின் விபரீதப் பயணத்தை அப்படியே தனது செல்போனில் ‘வீடியோ கவரேஜ்’ செய்து, சமூக வலைதளங்களில் தட்டி விட்டு உள்ளார்.
இந்த வீடியோ தற்போது வாழ்க வலைதளங்களில் பரவி, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கண்டனங்களையும் கிளப்பி உள்ளது.
சமீப காலமாகக் கோவையில் மைனர் சிறுவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அஜாக்கிரதையாக வாகனங்களை இயக்கி கொடூர விபத்துகளில் சிக்குவது தொடர் கதையாகி வரும் நிலையில், இந்த வீடியோ பெற்றோர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வைரல் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாணவர்களின் டூ-வீலர் பதிவு எண்ணை ‘டிராக்’ செய்து, ஆர்.எஸ்.புரம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் மற்றும் பள்ளி நிர்வாகம் இணைந்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
